ஜூன் 28இல் ஈரான் ஜனாதிபதி தேர்தல் : ரைசியின் உடலுக்கு பல்லாயிரம் கணக்கானோர் அஞ்சலி



ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்ட நிலையில் ஈரானில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் இறுதித் தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் பெற்ற உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமனெய், ஜனாதிபதியின் மரணத்திற்கு ஐந்து நாள் துக்க தினத்தை அறிவித்திருப்பதோடு, துணை ஜனாதிபதியான 68 வயது மொஹமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.


இந்நிலையில் நீதித் துறை, அரசு மற்றும் பாராளுமன்ற தலைவர்களின் கூட்டத்தில் தேர்தல் திகதிக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பாதுகாவல் சபையினால் எடுக்கப்பட்ட ஆரம்ப உடன்பாட்டுக்கு அமைய 14ஆவது ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் ஜூன் 28 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரைசி, ஈரான் வெளியுறவு அமைச்சர் உட்பட அதிகாரிகள் பயணித்த ஹெலிகொப்டர் பனிமூட்டம் கொண்ட மலைப்பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது.


இந்நிலையில் ஈரானின் தப்ரிஸ் நகரில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு காலஞ்சென்ற ஜனாதிபதிக்கு இறுதி மரியாதை செலுத்திவருகின்றனர். ரைஸி பிறந்த மாஷாட் நகரில் நாளை (23) அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தோர் குறித்து அவதூறான கருத்துகளை இணையத்தில் வெளியிடுவோரைக் கைதுசெய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேநேரம் ஈரான் ஜனாதிபதி அணிந்திருந்த மோதிரம் வித்து நடைபெற்ற இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரான் ஜனாதிபதிக்கு அந்நாட்டு ஆன்மிக தலைவரால் வழங்கப்பட்ட மோதிரமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.