கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு: 230 பேர் பலி

எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 230 மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இத்தாக்குதல் ஒரொமியா நகரில் உள்ள கிராமங்களில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததால் பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலில் அம்ஹரா  இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பலியானதாகவும்  தாக்குதலை அடுத்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகிறது.

ஒரொமியா மாகாணத்தை எத்தியோப்பியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக அறிவிக்குமாறு கோரி அவர்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்த நபர் ஒருவர் கூறும்போது, 'நான் 230 உடல்களை எண்ணிவிட்டேன். எங்கள் வாழ்நாளில் நாங்கள் பார்த்த பொதுமக்களுக்கு எதிரான மிகக் கொடிய தாக்குதல் இது என்று நான் பயப்படுகிறேன். 

நாங்கள் அவர்களை வெகுசன புதைகுழிகளில் புதைக்கிறோம். இன்னும் உடல்களைச் சேகரித்து வருகிறோம். கூட்டாட்சி இராணுவப் பிரிவுகள் இப்போது வந்துள்ளன, ஆனால் அவர்கள் வெளியேறினால் தாக்குதல்கள் தொடரக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம்' என தெரிவித்துள்ளார்.