இந்திய ஒப்பந்தம் : நீதிமன்ற விசாரணை இடம்பெறுவதால் விடயங்களை வெளியிட முடியாது - பிரதமர்

இந்திய ஒப்பந்த விவகாரம்  நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளதால் ஒப்பந்தம் தொடர்பான விடயங்களை  தற்போது வெளிப்படுத்த முடியாது . நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு  மாறாக  செயற்பட முடியாது என்று  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.



 பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது  ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  அஜித் பி  பெரேரா,


அரசாங்கம் அண்மையில் இந்தியாவுடன்  கைச்சாத்திட்ட ஒப்பந்தங்கள் பற்றி பிரதமரிடம்  கேள்வியெழுப்பியிருந்தேன். இந்த ஒப்பந்தங்களை முழுமையாக ஆராய்ந்து  ஒப்பந்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதாக பிரதமர்  கடந்த மாதம் குறிப்பிட்டார்.


ஆனால் இன்றளவில் இந்த ஒப்பந்தங்கள் பற்றி ஏதும்  வெளிப்படுத்தப்படவில்லை.ஒப்பந்தங்கள் இன்றும் ஆராயப்படுகிறதா அல்லது அவற்றை வெளிப்படுத்துவதற்கு ஏதேனும் பிரச்சினை  காணப்படுகிறதா என்று  வினவினார்.


இதற்கு  பதிலளித்த பிரதமர் இந்திய ஒப்பந்தங்கள் விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது அதனால் தற்போது ஒப்பந்தங்கள் தொடர்பில் எதனையும் வெளிப்படுத்த  முடியாது.


இந்த விடயத்தில் இவர் ஏன் கலக்கமடைகிறார் என்பது எமக்கு தெரியவில்லை. நீதிமன்ற விசாரணைகளினால்தான் விடயங்களை வெளிப்படுத்த முடியவில்லை. இதை தவிர்த்து இதில்  எனக்கு ஏதும் பிரச்சினை இல்லை என்றார்.