எவரும் எதிர்பாராத வகையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நாளை (19) இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை மற்றும் நாளை மறுதினம் தனது இரண்டு நாள் இலங்கை விஜயத்தின் போது, அதிபர் ரணில் மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் பல கட்சிகளின் உயர் மட்ட தலைவர்களுடன் டோவல் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபருடனான சந்திப்பு நாளை மறுதினம் (20) இடம்பெறவுள்ளது.
டோவல் எதிர்பாராதவிதமாக இலங்கைக்கு வருகை தருவது இந்திய அரசின் சிறப்புச் செய்தியை வழங்குவதா அல்லது இலங்கை அரசின் சிறப்புச் செய்தியை இந்தியாவுக்கு எடுத்துச் செல்வதற்காகவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், பல்வேறு அரசாங்கக் கட்சிகள் சமீப மாதங்களில் அதிபருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய பல சந்தர்ப்பங்களில் முயற்சித்துள்ளன, ஆனால் மோடி அதற்கு நேரம் ஒதுக்காததால் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன.
இந்த நாட்டிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மாத்திரமன்றி, இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மூலமாகவும் சந்திப்பை திட்டமிட அதிபர் முயற்சித்த போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
பின்னர், சாகல ரத்நாயக்க, அதிபரின் விசேட பிரதிநிதியாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார், ஆனால் அவரால் அதிபருக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பை ஏற்பாடு செய்ய முடியவில்லை. அதனைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் டோவலை அழைத்து அதிபருக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையில் சந்திப்பொன்றைக் கோரினார். அதுவும் பலனளிக்கவில்லை.
பின்னர், அஜித் டோவலின் மகன் சௌர்ய டோவல் கடந்த வாரம் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வர நேர்ந்தது, இதனை அறிந்த அதிபர், அவரை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். இந்தப் பின்னணியில், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் இலங்கைக்கான இரண்டு நாள் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            