இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.
அந்த வகையில் கொழும்பில் நடைபெற்ற இக்கொண்டாட்டங்களின் பிரதான நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது இந்திய தேசியக்கொடியினை ஏற்றிவைத்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அணிவகுப்பு மரியாதையினையும் பார்வையிட்டிருந்தார்.
அத்துடன் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரால் நாட்டு மக்களுக்காக ஆற்றப்பட்ட உரையின் சுருக்கங்களும் உயர்ஸ்தானிகரால் இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது.
பல்வேறு கலை நிகழ்வுகள் இக்கொண்டாட்டங்களுக்கு மேலும் உயிர்ப்பூட்டியிருந்தன.
இலங்கை கடற்படையின் இசைக் குழுவினர், தேசப்பற்றையும் வீரத்தையும் பிரதிபலிக்கும் மெல்லிசை மெட்டுகளை இங்கு இசைத்திருந்தனர்.
மேலும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் மாணவர்கள் பிரபலமான தேசபக்தி பாடல்களையும் இங்கு இசைத்தனர்.
அத்துடன், இலங்கையின் சமாதானம் மற்றும் ஐக்கியத்தினை நிலை நிறுத்துவதற்காக அதியுயர் தியாகம் செய்த இந்திய படையினரை நினைவுகூரும் இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூபியில் உயர்ஸ்தானிகரும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏனைய அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
இன்றைய மாலை 6.00 மணிக்கு, கொழும்பு 07, நெலும் போகுண அரங்கில், உலகப் புகழ்பெற்ற வயலின் கலைஞர் டாக்டர் எல்.சுப்பிரமணியம் மற்றும் பல வெற்றி பெற்ற திரைப்பட பின்னணி பாடகி கவிதா கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து நிகழ்த்தும் “Bollywood & Beyond” எனும் பிரமாண்டமான இசை-கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஹாவ்லாக் சிட்டி மால், சுவாமி விவேகானந்த கலாச்சார மையம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தான தூதரகம் இணைந்து நடத்தும் India Fest 2025 எனும் வண்ணமிகு திருவிழா ஆகஸ்ட் 15 முதல் 17 வரை நடைபெறும்.
இந்த மூன்று நாள் விழாவில் இந்திய ஆடை அலங்காரம், கைவினைப் பொருட்கள், சமையல் வகைகள், நேரடி நிகழ்ச்சிகள், திரைப்பட காட்சிகள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இது பொதுமக்களுக்கு இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை நெருக்கமாக அனுபவிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
இதேவேளை கண்டியில் உள்ள உதவி உயர்ஸ்தானிகராலயம் யாழ்ப்பாணத்தில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் காரியாலயம் ஆகியவையும் இந்திய சுதந்திர தின விசேட நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தன.