நுவரெலியாவில் நேற்று நள்ளிரவு பள்ளத்தில் வீழ்ந்து மற்றுமொரு பஸ் கோர விபத்து : 23 பேர் படுகாயம்



 


நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நேற்று (23) நள்ளிரவு (11:15 ) மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 23 பயணிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 18 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி குடை சாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதேநேரம் கொழும்பு - வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இதில் பேருந்தில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவரின் உடல் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.