இஸ்ரேல் - ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முக்கிய அறிவிப்பு வெளியானது : மகிழ்ச்சியில் உலக நாடுகள்


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இஸ்ரேல் இராணுவம் மற்றும் காசாவின் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வருகின்றது.
இந்த போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
 
போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மீண்டும் கட்டி எழுப்பப்படும். அந்த பகுதியில் இருந்து தீவிரவாதம் அகற்றப்படும். ஹமாஸ் குழுவின் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைக்க வேண்டும். போர் நிறுத்தம் அமுல் செய்யப்பட்ட பிறகு காசாவில் இருந்து இஸ்ரேல் ராணுவம் படிப்படியாக வெளியேறும்.

ஹமாஸ் குழுவினர் ஆயுதங்களை கைவிட வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். காசாவில் இருந்து அவர்கள் பாதுகாப்பாக வெளிநாடுகளில் குடியேறலாம். காசாவை நிர்வகிக்க உள்ளூர் தலைவர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்படும்.
 
இந்த குழுவில் ஹமாஸ் தலைவர்களுக்கு இடம் கிடையாது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச குழுவின் வழிகாட்டுதலின்படி புதிய குழு காசாவை நிர்வகிக்கும்.
 
காசாவில் சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும். சர்வதேச முதலீடு அதிகரிக்கப்படும். வேலைவாய்ப்புகள் பெருக்கப்படும். ஐஎஸ்எப் என்ற சர்வதேச படை காசாவில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் என்பன உள்ளிட்ட திட்டத்தை அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்ரேல் அரசு மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே நேற்று முன்தினம் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

இஸ்ரேல் அரசின் சிரேஷ்ட அமைச்சர் ரோன் டெர்மர் தலைமையிலான குழு, ஹமாஸின் சிரேஷ்ட தலைவர் காலில் அல் ஹையா தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இரு தரப்புக்கும் இடையே 2ஆவது நாளாக நேற்றும் பேச்சுவார்த்தை நீடித்தது.
 
இதேநேரம் அமெரிக்காவின் சிறப்பு தூதர் விட்காப் மற்றும் ஜனாதிபதி ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில்  முக்கிய உடன்பாடு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறும்போது, “இஸ்ரேல் அரசு, ஹமாஸ் குழுவினர் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுதலை செய்து, உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைத்துவிட்டால் உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்" என்று தெரிவித்தன.

இரு நாடுகளுக்கு இடையில் முன்னெடுக்கப்படும் அமைதிப் பேச்சுவார்த்தை, உலக நாடுகள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு, போர் முடிவுக்குவரும் என்ற மகிழ்ச்சியுடன் உலகத் தலைவர்கள் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.