ட்ரம்பிற்கு பெரும் ஏமாற்றம்... நோபல் பரிசுக்கு வாய்ப்பே இல்லை என தகவல் : போரை நானே நிறுத்தினேன் என 50வது முறையாக கூறி ட்ரம்ப் சாதனை..!

 

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நாளை மறுதினம் 10ஆம் திகதி அறிவிக்கப்பட இருக்கிறது.
 
இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துவரும் நிலையில் அதற்கான வாய்ப்பு அறவே இல்லை என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக என இவ்விருதுகள் குறித்து உன்னிப்பாக அவதானித்துவரும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி மையத்தின் பணிப்பாளர் நினா கிரேகர் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் அமெரிக்காவில் கல்வி நிறுவனங்களுக்கான சுதந்திரங்களை ட்ரம்ப் மறுப்பதாக அமைதிக்கான நோபல் பரிசு குழு உறுப்பினர் ஒருவரே கூறியுள்ளதும் கவனம் பெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுக்காக ஆயிரக்கணக்கான பெயர்கள் முன்மொழியப்படுகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கான பட்டியலில், 338 நபர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் போன்ற சில தலைவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவருடைய பெயர், ஜனவரி 31 ஆம் திகதிக்கு பின்னரே  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, நோபல் பரிசுகளின் விதிகளின் பிரகாரம் இந்த பரிந்துரை செல்லாது எனவும் கூறப்படுகிறது. அதாவது, 2025 பரிசுக்கான பரிந்துரை காலக்கெடு ஜனவரி 31 ஆம் திகதி வரையே காணப்பட்டது.
 
ஆகையால், ட்ரம்ப்க்கான நோபல் வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகவே இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக, இறுதிப் பட்டியலில் அவரது பெயரைச் சேர்க்காததுடன், ஐந்து பேர் கொண்ட நோபல் குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அவரது பரிந்துரைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை, ட்ரம்ப்க்கு நோபல் பரிசு அறிவிக்கப்படாவிட்டால், அது நோர்வேக்கு பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே அமெரிக்காவின் 15 வீத வரியை அனுபவித்து வரும் நோர்வேக்கு இது மேலும் அதிகரிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதேநேரம் இருநாட்டு உறவுகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் முரண்பாடுகளை தோற்றுவிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கவிருந்த போரைத் தான் தலையிட்டுத் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த புகழ்பெற்ற கூற்றை அவர் 50ஆவது முறையாக கூறி சாதனை படைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.