சேதமடைந்த நிலையில் இலங்கையிலிருந்து பயணித்த ஏர் இந்தியா விமானத்தால் பரபரப்பு : உணவுதர மறுக்கப்பட்டதால் இலங்கை பயணி ஒருவர் உயிரிழப்பு


பறவை மோதி சேதமடைந்த விமானத்தை இலங்கையிலிருந்து 147 பயணிகளுடன் சென்னை வரை இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கொழும்பு விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏர்இந்தியா விமானம் தரையிறங்கும் போது பறவை மோதி விமானம் சேதமடைந்திருக்கிறது.

எனினும் பழுதடைந்த அதே விமானத்தில் இலங்கையில் இருந்து 147 பயணிகள், 6 ஊழியர்களுடன் அந்த ஏர் இந்தியா விமானம் சென்னை வந்திறங்கியதாக அதில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏர்இந்தியா விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணிக்கு பயணித்துள்ளது.

இந்த விமானத்தில் 164 பேர் பயணித்தனர். விமானம் அதிகாலை 1.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பயணிகள் அனைவரும் விமானத்தைவிட்டு கீழே இறங்கிய பின் விமானத்தை பராமரிக்கும் குழுவினர் அதனைப் பரிசோதித்தபோது அதிர்ச்சியடைந்தனர்.

விமானத்தின் மீது பறவை மோதி உயிரிழந்ததை பொறியியலாளர்கள் கண்டறிந்தனர். பறவையின் உடலை வெளியே எடுத்தபின், பறவை எங்கு மோதியது என ஆய்வுசெய்து வந்தனர்.

இதன் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, பழுதடைந்த அதே விமானத்தில் 147 பயணிகள், 6 ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் சென்னை வந்திறங்கியது.

அந்த விமானத்தை ஆய்வு செய்த பொறியியலாளர்கள், விமானம் பறப்பதற்கான தகுதியற்றது என அறிக்கை அளித்தனர். இதையடுத்து விமானம் முழுவதையும் சோதனை செய்யும் நடவடிக்கையில் பொறியியலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதேநேரம் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த இலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவருக்கு சைவ உணவு வழங்காமல் அசைவ உணவை வழங்கியமையால் அதனை உண்டு அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.