கடனை செலுத்த முடியாது விட்டால் சொத்துக்களை எழுதித் தாருங்கள்..! சீனா அதிரடி

கடனை மீளச் செலுத்தமுடியாது விட்டால் இலங்கையின் சொத்துக்களை தங்களுக்கு சொந்தமாக எழுதி வைக்குமாறு சீனா கூறியுள்ளதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை ஏற்படுமாக இருந்தால், ஹம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையம், மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட நாட்டின் முக்கிய சொத்துக்களை சீனாவுக்கு எழுதி வைக்க வேண்டிவரும் என்றும் கூறியுள்ளார்.

கடனை மீளச் செலுத்தமுடியாது விட்டால் இலங்கையின் சொத்துக்களை தங்களுக்கு சொந்தமாக எழுதி வைக்குமாறு சீனா கூறியுள்ளதாகவும் இதற்கு அரசு உடன் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆபிரிக்க நாடான உகண்டாவின் கம்பாலா நகரில் உள்ள என்டபே சர்வதேச விமான நிலையம், சீனாவின் கடனுக்கு மூழ்கியது.

உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் உள்ள அந்நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான என்டபே விமான நிலையத்தை சீனாவின் எக்சிம் வங்கி கையகப்படுத்தியது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உகண்டா அரசாங்கம், எக்சிம் வங்கியிடம் 207 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்று விமான நிலையத்தை விரிவுப்படுத்தி அபிவிருத்தி செய்தது.

எனினும் சீன வங்கியிடம் பெற்ற கடனை உகண்டா அரசாங்கத்தினால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இதன் காரணமாக விமான நிலையம், சீனாவின் எக்சிம் வங்கியின் கடனுக்கு மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கிவிடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இலங்கை சீனாவிடம் இருந்து பெற்ற 1.1 பில்லியன் டொலர் கடனுக்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியது.

சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு இலங்கை அரசாங்கம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.