இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றால், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன வெற்றிபெற்ற போது, பிரேமதாசவே தொடர்ந்தும் பிரதமராக இருந்தார்.
1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வெற்றிபெற்ற போது மறைந்த ரத்னசிறி விக்ரமநாயக்க பிரதமராக இருந்தார்.
1999 இல் குமாரதுங்க தனது இரண்டாவது அமைச்சரவையை அமைத்த பின்னரும் விக்ரமநாயக்க பிரதமராகத் தொடர்ந்தார்.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவிக்கு வரும் ஜனாதிபதியின் கீழ் வரும் பிரதமர், அதே பதவியில் தொடர்வது வழமையாகும் என்று அபேவர்த்தன கூறியுள்ளார்
இதேநேரம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும், யாழ் மாவட்ட சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
கொழும்பு பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று (23) காலை ஜனாதிபதியை சந்தித்து அவர்கள் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர்கள்,
பொருளாதார நெருக்கடிக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரு தலைவரே நாட்டுக்கு தேவை. தற்போதைய நிலையில் பரீட்சார்த்தம் செய்து பார்ப்பது எந்த வகையிலும் சாத்தியமில்லை. நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.