கரிகாலன் என்னிடம் சொன்னதைத்தான் சொன்னேன்!



தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கும் போது ரெலோ இயக்க ஜனா, ஈபிஆர்எல்எவ் இயக்க துரைரெட்ணம், புளட் இயக்கம் இவைகளை எடுக்க வேண்டாம் என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கட்டளை இட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சராக செயற்பட்டவருமான சட்டத்தரணி கி. துரைராசசிங்கம் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

கடந்த 2023, ஜனவரி,07இல் களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் வைத்து தான் அவர் அப்படி கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இப்போது சமூக ஊடகங்களில் அவரின் கட்டுரை பல உண்மைகளை வெளிப்படுத்திவிட்டது.

தலைவர் பிரபாகரனால் நிராகரிக்கப்பட்டவர்களே இந்த மும்மூர்த்திகள்.!

இதனைப் பார்த்து கடுப்பான ரெலோ கட்சியின் பொதுச்செயலாளர் ஜனா அவரின் நெருக்கமான ஒருவரை துரைராசசிங்கத்திடம் இது தொடர்பில் கேட்கும் படி பணித்திருந்தார்.

அவர் துரைராசசிங்கத்திடம் நேரடியாக நீங்கள் தமிழரசுக் கட்சி் மத்திய குழுக் கூட்டத்தில் எமது ரெலோ கட்சி பொதுச்செயலாளர் ஜனாவையும், ஈபிஆர்எல்எவ் மட்டக்களப்பு இரா துரைரெட்ணத்தையும், புளட் சித்தாத்தனையும் 2001இல் கூட்டமைப்பில் எடுக்கவேண்டாம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியதாக கூறினீர்களே.

உண்மையாக பிரபாகரன் உங்களிடம் எப்போது இவ்வாறு கூறினார் எனக் கேட்டார்.

அதற்கு துரைராசசிங்கம், “எனக்கு தலைவர் பிரபாகரன் கூறவில்லை. பின்னாளில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த கரிகாலன் என்பவரே என்னிடம் கூறினார்.

அவர்களை எடுக்காமைக்கு பல குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது இருப்பதாகவும் கூறினார்” என்பதை ஜனா கேட்டு வரச்சொன்னவரிடம் கூறியிருந்தார்.