இஸ்ரேல் பாராளுமன்றத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் பெரும் சர்ச்சை


இஸ்ரேலின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்ததை அடுத்து பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதில் தோல்வி அடைந்திருப்பது குறித்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த புதனன்று பணயக்கைதிகளின் உறவினர்கள் உட்பட சுமார் 20 ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய பாராளுமன்றத்திற்குள் கோசம் எழுப்பியதோடு அரங்கின் கண்ணாடிகள் மீது மஞ்சள் வர்ணத்தை பூசி எதிர்ப்பை வெளியிட்டனர்.

பாராளுமன்ற காவலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதலில் ஈடுபட்டதோடு பின்னர் அவர்கள் அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதன்போது பாராளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக கை அசைத்தனர்.

காசாவில் தொடர்ந்து 130 பணயக்கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுவதோடு இவர்களில் 33 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. காசா போர் தொடர்பில் நெதன்யாகுவும் இஸ்ரேலுக்குள் கடும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.