குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பலவிடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பலர் வெகுவிரைவில் கைது செய்யப்படுவார்கள் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்,
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விவகாரம் மற்றும் ஏனைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பலவிடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன.
அவற்றில் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயத்தில் குறிப்பிடப்பட்ட பெயர், மற்றும் தொடர்புடைய நபர்கள் விசாரணைகளின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் கைது செய்யப்படுவார்கள்.
வெளிநாடுகளில் உள்ளவர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையவில்லை. பல விடயங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. குற்றத்தின் இராச்சியமாகவே இருந்தது.
விசாரணைகள் சிறந்த முறையில் இடம்பெறுவதால் தான் பல விடயங்கள் வெளியாகியுள்ளன.விசாரணைகள் நிறைவுப்படுத்தப்பட்டு வெகுவிரைவில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரவி செனவிரத்ன ஆகியோர் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வலியுறுத்தலுக்கு அமைவாகவே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதன் உண்மைத்தன்மை என்ன? என கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர்,
எனக்கு தெரியாது. ஆராய்ந்து பார்த்துக் குறிப்பிடுகிறேன் என தெரிவித்தார்.