ரணிலை பார்க்கச்சென்றாரா ஹரிணி? - பிரதமர் தரப்பிலிருந்து வெளியான முக்கிய தகவல்




வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய வைத்தியசாலைக்குச் சென்றதாக வெளியான செய்திகள் போலியானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப் பிரிவு, இது போலியான செய்தி என தெரிவித்துள்ளது.


கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய சென்றுள்ளதாக ஊடகங்களில் செய்திகள்  வெளியாகியிருந்தன.
 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்கவுடன்  பிரதமர் ஹரிணி அமரசூரிய வருகைத் தந்ததாக  தெரிவித்து மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த தகவல் வெளியாகியிருந்தது.

மேலும்  அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் குறித்த செய்தி போலியானது என்றும்,  ரணில் விக்ரமசிங்கவைப் பார்வையிட பிரதமர் ஹரிணி செல்லவில்லை  என்றும் பிரதமர் தரப்பு தெரிவித்துள்ளது.
 

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
 
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால், கடந்த 22 ஆம் திகதி கைது செய்யபட்ட முன்னாள் ஜனாதிபதியை, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

 
இதனைத்தொடர்ந்து, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
 
நீர்சத்து குறைப்பாடு காரணமாக ஏற்பட்ட அசௌகரியத்தால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கவனிக்கப்பட்டு வருகின்றார்.
 
இந்தநிலையில் ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை பார்வையிட வரும் அரசியல் தலைவர்களின் வருகைகளை மட்டுப்படுத்துமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 
ரணில் விக்ரமசிங்கவின் உடல் நிலை முழுமையாக குணமடையவில்லை எனவும், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.