முடங்கியது தமிழர் தாயகம்..!

இலங்கை அரசால் கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடக் கோரியும், தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தசிங்கள மயமாக்கலை உடனடியாக நிறுத்தக் கோரியும் இன்று (25.04.2023) வடக்கு கிழக்கு தழுவிய பொது முடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளால் ஓரணியாக விடுக்கப்பட்ட பொது முடக்க அழைப்புக்கு வடக்கு - கிழக்கை பிரதான தளமாகக் கொண்டு செயற்படும் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டு அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது.


யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் ,சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் நடமாட்டத்தை ஆங்காங்கே அவதானிக்க முடிகின்றது.


யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகள் வழமை போல் இடம்பெறுகின்றன. தனியார் பேருந்து சேவைகள் இயங்கவில்லை.

முச்சக்கர வண்டி சேவையும் யாழ் நகரில் இடம்பெறுகின்றது. பொதுமக்கள் அங்காங்கே வீதிகளில் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது.

மேலும் சில உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் உட்பட அத்தியாவசிய சேவைகள் யாவும் வழமை போல் செயற்படுகின்றது.


முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை,மாங்குளம்,ஒட்டுசுட்டான்,மல்லாவி வர்த்தகர்கள் தங்கள் வணிக நிலையங்களை மூடிஎதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு எதிர்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதற்கமைய புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரும் அனைத்து வணிக நிலையங்களையும் மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனை பொதுசேவை அமைப்புக்களான சந்தைகள்,வணிக நிலையங்கள் தனியார் போக்குவரத்து அனைத்தும் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கிவருகின்றார்கள். 


திருகோணமலை

திருகோணமலையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், சிங்களமயமாக்கலை எதிர்த்து வடக்கு கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25) பூரண ஹர்த்தால் இடம் பெறுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடைய பகுதிகளில் சகல துறைகளும் இன்று முடங்கியுள்ளன.

திருகோணமலையில் தமிழ், முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள், கடைகள் பூட்டப்பட்டு இருந்தன, பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை இதனால் பாடசாலைகள் இயங்கவில்லை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து இருந்தது.


கிளிநொச்சி

வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் இன்று (25.04.2023) பொது நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கங்கள், மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், பொதுமக்கள் உட்பட அனைவரும் பூரண ஆதரவு வழங்கியுள்ளதுடன் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்த வரையில் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் பயங்கரவாத சட்டத்திற்கு மாற்றாக புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், முப்படையினரின் காணி அபகரிப்பு உட்பட வனவள திணைக்களம், தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகளை கபளீகரம் செய்கின்றமை, கிழக்கில் மேய்ச்சல் தரைகளில் சிங்கள குடியேற்றங்கள் இடம் பெறுவதையும் நிறுத்தக் கோரியும், மதஸ்தலங்கள் தாக்கப்படுகின்றமை தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றங்களை தடுக்க கோரியும் இன்றைய தினம் (25) வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து பாடசாலைக்கு மாணவர்களின் வருகையும் குறைவாக காணப்பட்டமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.  


களுவாஞ்சிகுடி

இலங்கை அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத சட்டத்தை எதிர்த்தும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் செவ்வாய்கிழமை (25.04.2023) முன்னெடுக்கப்பட்ட நிருவாக முடக்கலால் களுவாஞ்சிகுடி நகரமே முற்றாக முடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

பொதுச்சந்தை, உள்ளிட்ட பிரதான வர்த்தக நிலையங்கள், கடைகள், நகைக்கடைகள், உள்ளிட்ட அனைத்தும் செவ்வாய்கிழமை திறக்கப்படவில்லை. நகரில் அமைந்துள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும், மூடப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும் மாணவர்கள் சென்றிருக்கவில்லை. அரச மற்றும் தனியார் வங்கிகள் இயங்கவில்லை.

எனினும் மருந்தகங்கள், வைத்தியசாலைகள் என்பன வழமை போன்று இடம்பெறுவதையும், ஒருசில தனியார் மற்றும் இலங்கை அரச பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், அதில் பிரயாணிகள் மிக மிகக் குறைந்தளவானோரே பயணிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.   


மட்டக்களப்பு 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக செவ்வாய்கிழமை (25.04.2023) வடக்கு கிழக்கில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் இடம்பெற்றது.

இந்த கடை அடைப்பு போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளதுடன் மட்டக்களப்பில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக கடைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. போக்குவரத்து சேவைகளும் பாரியளவில் இடம்பெறவில்லை. ஹர்த்தால் காரணமாக மாவட்டத்தின் வழமையான அலுவல்கள் பாதிக்கப்பட்டிருந்தன.


தென்மராட்சி 

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராகவும் தமிழர்களின் பாரம்பரிய இன,மத அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு எதிராகவும் தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடை அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

இக்கடையடைப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவை வழங்கியுள்ள நிலையில் சாவகச்சேரி நகரமும் கொடிகாமம் நகரமும் முற்றாக முடங்கிய நிலையில் உள்ளது.

நகரத்தின் பிரதான சந்தைகள் வர்த்தக கட்டிட தொகுதிகள் அனைத்தும் முற்றாக மூடப்பட்டுள்ளன. அதேபோல் தனியார் போக்குவரத்துக்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தென்மராட்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரவின்மையால் இயல்பு நிலை இழந்து காணப்படுகின்றன. இந்நிலையில் ஒரு சிலமாணவர்கள் பாடசாலைகள் இயங்காமையினால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக உள்ளது.