8 போர்களை நிறுத்தியுள்ளேன்.. நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே அவமானம் : டிரம்ப்


இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு போர்களை நிறுத்தியுள்ளதால் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அவ்வாறு தனக்கு பரிசு வழங்காவிட்டால் அது அமெரிக்காவை அவமதிக்கும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இஸ்ரேல் - ஹமாஸ், இந்தியா - பாகிஸ்தான் உட்பட 8 போர்களை தான் நிறுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ள டிரம்ப் "ஆனால், எதுவும் செய்யாத ஒருவருக்கு பரிசு வழங்குவார்கள் என்றும்" விமர்சனம் செய்துள்ளார்.
 
ஒக்டோபர் 10ஆம் திகதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில், "தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவுக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும்" என்று டிரம்ப் தெரிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
 
அண்மையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தி, போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறினாலும், ஹமாஸ் அமைப்பு இன்னும் அதிகாரபூர்வமாக போரை நிறுத்தியதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் உக்ரேனுக்கு டொமாஹாக்ஸ் ஏவுகணைகளை வழங்கவும் மற்றும் ரஷ்யாவுக்குள் நீண்ட துாரம் சென்று தாக்குவதற்கு தேவையான உளவு தகவல்களை வழங்கவும் அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா இதுபோன்ற உதவிகளை உக்ரேனுக்கு வழங்குவது இதுவே முதல்முறை எனவும் சுட்டக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக அனைத்து நேட்டோ நாடுகளும் போரிடுவதாக ஜனாதிபதி புடின் குற்றம் சுமத்தியுள்ளார்.

உக்ரேனில் போர் நடவடிக்கையில் ரஷ்யாவிற்கு எதிராக அனைத்து நேட்டோ நாடுகளும் போரிட்டு வருவதாக வியாழக்கிழமை ரஷ்ய ஜனாதிபதி புடின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக ஐரோப்பாவில் புதிய உளவுத்துறை மையத்தை அமைத்து இருப்பதாகவும், தரைவழி தாக்குதலை முன்னெடுப்பதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காக பயிற்சியாளர்களை தொடர்ந்து வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், ரஷ்யா தன்னை தகவமைத்துக் கொண்டு போர் திறன் மிக்க நாடாக இருப்பதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.

புடின் இந்த கருத்தை வால்டாய் விவாத மன்றத்தில் முன்வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவை காகித புலி என்று வர்ணித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கருத்துக்கும் இந்த நிகழ்வில் புடின் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், டிரம்ப் ரஷ்யாவை காகித புலி என்று விளையாட்டாக சொன்னாரா என்று தெரியவில்லை, ஒருவேளை அப்படியே கூறி இருந்தால் காகித புலியுடன் வந்து மோதுங்கள் என்று புடின் சவால் விடுத்துள்ளார்.