தற்போதைய அரசாங்கம் பிள்ளையானை பிரதான சூத்திரதாரியாக காண்பித்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்து பெரும் நாடகம் ஒன்றை நடத்திவருவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தான் சிறைச்சாலைக்கு சென்று பிள்ளையானை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒன்றும் கேட்கவும் இல்லை எனக்கு ஒன்றும் தெரியாது என கூறியதாகவும் கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் பொதுப் பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இலங்கையில் இருக்கும் பெரும் பொய்யர்கள்.
2017 ஆம் ஆண்டு விஜயகாந்தன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி, புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் புலனாய்வு பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார்.
பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா, நிசாந்த கந்தப்பா என அழைக்கப்படுபவரும் கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டோ கிசான் வெலகெதர ஆகியோர் இணைந்து குறித்த விஜகாந்தனை வேலையில் இருந்து அகற்றுவதாக தெரிவித்து, பொய்சாட்சியம் கூற சொல்லி சில ஆவணங்களில் கையொப்பம் பெற்றுக் கொள்கின்றனர்.
அவருக்கு சிங்களம் வாசிக்க தெரியாது. கதைக்க மட்டும் தான் தெரியும். குறித்த ஆவணங்களை வைத்துக் கொண்டு தான் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, நிசாந்த உலுகேதென்ன, சுனித் ரணசிங்க மேலும் பலரை பொய்யான வழக்கில் சம்பந்தப்படுத்த தான், நிசாந்த சில்வா மற்றும் கொமாண்டோ கிசான் வெலகெதர ஆகியோர் இந்த பொய்சாட்சிகளை உருவாக்கியுள்ளனர்.
விஜகாந்தன் இது பற்றி எனக்கு தெரிவித்த நிலையில் நான் 2017 டிசம்பர் 05 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக முன்னிலையாகி இவரிடம் பொய்சாட்சியம் பெறப்பட்டுள்ளது
இவருக்கு சிங்களம் வாசிக்க கூட தெரியாது, இவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தேன். பின்னர் நீதிபதி அவர்கள் 2018 ஜனவரி 02 ஆம் திகதி முறைப்பாடு ஒன்றை பெற்றுக் கொள்கிறார்.
ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன தலைமையில் பொய்சாட்சி பெறப்பட்டமை தொடர்பில் நான் உண்மைகளை வெளிப்படுத்தி அதை முறியடித்தேன். என்னிடம் அவர்கள் வைராக்கியம் கொள்வதற்கான முதல் காரணம் இதுவாகும்.
இரண்டாவது காரணம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் ரவி செனவிரத்ன குற்றவாளியாக காட்டப்படுகிறார்.
அதனால் அவருக்கு பதவி வழங்க முடியாததால் தற்போதைய ஜனாதிபதி விசாரணை அறிக்கையை வெளியிட மறுக்கிறார்.
நான் அவர் மறைத்த பகுதிகளை வெளிப்படுத்தினேன். இரண்டாவது தடவையும் ரவி செனவிரத்னவின் பொய்களை வெளிபடுத்தியதால் மேலும் என் மேல் கோபம் கொள்கிறார்.
அதன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையானை கைது செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முக்கியமான தகவல்களை குற்றிப்பிட்டதாக சொன்னார்.
நான் பிள்ளையானை சந்திக்க பலவாறான சட்டங்களை கொண்டு சட்டத்தரணியாக சென்றிருந்தேன். அவரை யாருக்கும் சந்திக்க முடியாத நிலையிருந்தது.
நான் சிறைச்சாலைக்கு சென்று பிள்ளையானை சந்தித்து பேசினேன். அப்போது அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஒன்றும் கேட்கவும் இல்லை எனக்கு ஒன்றும் தெரியாது என்றார்.
நான் அதை நாட்டுக்கு தெரியப்படுத்தினேன். அரசாங்கம் பிள்ளையானை பிரதான சூத்திரதாரியாக காண்பித்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்து பெரும் நாடகம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
அதுவும் என்னால் முடியாமல் போய்விட்டது. இறுதியாக நிஷாந்த உலுகேதென்ன கைதில், பாரதி அல்லது தம்பிள்ளை மகேஷ்வரன் என்ற திருகோணமலையை சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் புலனாய்வு பிரிவின் தலைவரின் சாட்சிகள் பெறப்பட்டுள்ளது.
அதுவும் புனையப்பட்ட பொய்சாட்சி என்று தான் 2025 ஓகஸ்ட் 05 ஆம் திகதி ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தேன்.
அவை நீதிமன்றத்திலும் உறுதிப்படுத்தப்பட்டது. நான்கு தடவைகள் அரசாங்கத்தால் புனையப்பட்ட சாட்சிகளை கொண்டு சிறைப்படுத்தும் நாடகங்களை நான் முறியடித்தேன்.
ஆதலால் நான் இருந்தால், இவர்களால் புனையப்பட்ட சாட்சிகளில் யாரையாவது கைது செய்து, நாங்கள் கள்வர்களை பிடித்து விட்டோம் என மக்களுக்கு நடத்தும் நாடகத்தை செய்ய முடியாது என்பதால் என்னை கைது செய்து சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர்.
தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறினார், யாரையாவது கைது செய்ய முடியாவிட்டால் சட்டம் இயற்றியாவது சிறையில் அடைப்போம் என்றார்.
அவ்வாறான சட்டம் ஒன்றே ICCRP ஆகும். நான் இதற்கு அஞ்சப் போவதில்லை இரு கிழமைகளின் பின்னர் நான் நாட்டுக்கு வருவேன்” என கூறியுள்ளார்.