வரலாற்றில் வேறு எவருக்கும் ஏற்படாத நிலை கோட்டாபயவுக்கு! ராஜதந்திர - பின்னணியில் ரணிலின் தந்திர நகர்வு

சிங்கப்பூர் விசா முடிந்து இலங்கை திரும்புவதற்கு காத்திருந்த கோட்டாபய தற்காலிகமாக தாய்லாந்துக்கு பயணமாகியுள்ளார்.

நாடு திரும்புவதற்கான சரியான நேரம் அமையவில்லை எனக் கூறி ரணில் விக்ரமசிங்கவே தாய்லாந்திற்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினரும், எதிர்வரும் நவம்பர் மாதம் தாய்லாந்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் அமெரிக்காவில் உள்ள தனது மகனிடம் செல்வதற்கு கோட்டாபய முயற்சித்து வருகின்றார்.

கடந்த அதிபர் தேர்தலின் போது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்த கோட்டாபய தற்பொழுது சாதாரண இலங்கை குடிமகனாவே அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.

இதன் காரணமாக, கோட்டாபய எதிர்பார்த்த அமெரிக்கா விசா கிடைக்கப்பெறுவது சாத்தியமில்லை என கூறப்படுகின்றது.

இதற்கு தீர்வாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க முடிந்தால், கோட்டாபயவுக்கு இராஜதந்திர மட்டத்தில் அமெரிக்கா செல்ல முடியும் என ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஆனால், குறித்த பதவியை கோட்டாபயவுக்கு வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாக இருக்கும் முன்னாள் பிரதம நீதியரசர் பதவி விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த முன்னாள் பிரதம நீதியரசர், கோட்டாபய ராஜபக்சவினால் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரிடம் பேசி பதவி விலக கோருமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதற்கமைய அமெரிக்காவில் உள்ள முன்னாள் பிரதம நீதியரசரிடம் கோட்டாபய இந்த உதவியை செய்யுமாறு கோரியுள்ளார். ஆனால் நீதிபதி கோட்டாபயவிடன் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அமெரிக்கா செல்ல முடியாமலும் நாட்டில் உள்ள எதிர்ப்பு காரணமாக நாடு திரும்ப முடியாமலும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுள்ளார்.

இதன் பின்னணியில், கோட்டாவை அமெரிக்காவிற்கு அனுப்பும் உண்மையான எண்ணம் ரணிலுக்கு இருந்தால் தற்போதைய அதிபர் எனும் அதிகாரத்தை பயன்படுத்தி, நிரந்தர பிரதிநிதியை நீக்கிவிட்டு கோட்டாபயவை நியமிக்க முடியும் எனவும் ரணில் அவ்வாறு செய்யாது தனது தந்திர நகர்வை பயன்படுத்துவது எதிர்கால அரசியலை நோக்கியாதாக இருக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்,

இதற்கிடையில்,  கோட்டாபயவின் மனைவி அயோமா ராஜபக்ச இன்னும் அமெரிக்க குடியுரிமையுடன் இருப்பதால் அவர் அமெரிக்கா செல்வதில் தடை இல்லையெனவும், மனைவி அமெரிக்க குடியுரிமையுடன் இருப்பதால் கோட்டாபய கிரீன் அட்டை விசாவை விண்ணப்பிக்க தகுதியுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, அமெரிக்காவில் உள்ள அவரது சட்டத்தரணிகள் இதற்கான விண்ணப்ப நடைமுறையை கடந்த மாதம் முதல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.