வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் - வெளியாகிய அறிவித்தல்

இலங்கையிலுள்ள வங்கிகளில் பெறப்பட்ட கடன்களுக்கான வங்கி வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள் வங்கியுடன் கலந்துரையாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிதி இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஷெஹான் சேமசிங்க தலைமையில் நடைபெற்ற நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் இதனைத் தெரிவித்தார்.

வட்டி வீத அதிகரிப்பால் சில கடனாளிகளின் சம்பளம் முழுவதும் கடன் தவணையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர், வாடிக்கையாளர்கள் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய வட்டியை மாத்திரம் சலுகைக் காலத்திற்கு செலுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வங்கிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.