நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதனடிப்படையில்
கெரவலபிட்டிய - யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உலை எண்ணெய் திருடப்பட்டு, அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்கும் மோசடியொன்று கண்டறியப்பட்டுள்ளது
கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தின் புலனாய்வுப் பிரிவு நேற்று (04) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் மூலம் இந்த மோசடி தெரியவந்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்பின் போது, திருடப்பட்ட 33,000 லீற்றர் உலை எண்ணெயுடன் கொள்கலன் வாகனம் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பெரிய அனல் மின் நிலையமான கெரவலப்பிட்டிய - யுகதனவி மின் உற்பத்தி நிலையம் 300 மெகாவோட் கொள்ளளவை தேசிய அமைப்பிற்கு அனுப்புகிறது.
இந்த ஆலையில் இருந்து மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உலை எண்ணெயினை திருடும் மோசடிக் கும்பல் பற்றி வத்தளை, போபிட்டிய பிரதேசத்தில் இருந்து தகவல் வெளியாகியிருந்தது.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் உலை எண்ணெய் வத்தளை, போபிட்டிய பிரதேசத்தில் உள்ள கொள்கலன் வாகன முற்றம் ஒன்றில் சாதுர்யமான முறையில் திருடப்பட்டு வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன்படி, கிடைத்த தகவலுக்கு அமைய கொலன்னாவை களஞ்சிய நிலைய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று பிற்பகல் குறித்த இடத்தை சுற்றிவளைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது