காசாவை தொடர்ந்து ஏமன் தலைநகர் மீதும் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

ஏமன் தலைநகர் சைனாவில் இஸ்ரேல் இன்று விமான தாக்குதலை நடத்தியுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல் ஏமன் ஜனாதிபதி வளாகம் அருகிலும் ஏவுகணை தளங்களிலும் நடைபெற்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஹவுதி அமைப்பைச் சார்ந்த அல்-மசிரா தொலைகாட்சி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை உறுதிசெய்துள்ளது.

இந்த தாக்குதலில், ஹவுதி தரப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும், ஒரு அரசு அலுவலகம் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஹவுதிகள் கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக ஹவுதிகள் பயன்படுத்திய ஏவுகணையில், Cluster குண்டுகள் இருந்தது என்பது இஸ்ரேலின் விமானப்படை நடத்திய ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.


இது தற்போது நடைபெறும் இஸ்ரேல் - ஹமாஸ் போர் சூழலில் ஹவுதிகள் இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்திய புதிய வகை ஆயுதமாகும்.

இதனிடையே இஸ்ரேலின் விமானப்படை காசா நகரத்தின் சில பகுதிகளைத் தாக்கியுள்ளன.
 
காசாவின் மிகப்பெரிய நகர்ப்புறப் பகுதியைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டங்களுக்கு மத்தியிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 
இந்தத் தாக்குதல் அங்கு வசிக்கும் சுமார் பத்து இலட்சம் பாலஸ்தீனியர்கள் மீது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
நகரத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தடையற்ற வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
 
இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
சுமார் 300 பேர் காயமடைந்தனர் என்று ஹமாஸின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது