நள்ளிரவில் தீப்பற்றியெரிந்த குடியிருப்புகள் : 36 பேர் பாதிப்பு


 

தலவாக்கலை லிந்துலை பெயாவல் தோட்ட பெயாபீல்ட் பிரிவு தோட்டத்திலுள்ள ஐந்து குடியிருப்புக்கள் நேற்று (04) இரவு தீக்கிரையாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். இத் தீ விபத்து காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின் கசிவு காரணமாக ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ ஏனைய வீடுகளுக்கும் பரவியதாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர குமார தெரிவித்தார்.

அந்த தொடர் குடியிருப்பில் 24 குடியிருப்புகள் காணப்படுகின்ற நிலையில் ஏனைய குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் அத்தோட்டத் தொழிலாளர்களும், லிந்துலை பொலிஸாரும் இணைந்து சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குயிருப்புகளிலிருந்த பெறுமதியான பொருட்கள், மாணவர்களின் சீருடைகள், பாடசாலை புத்தகங்கள் இன்னும் பல முக்கியமான ஆவணங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இத்தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்காலிகமாக அத்தோட்ட வாசிகசாலையில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலருணவுகளை பொருட்களை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகமும் அப்பகுதி கிராம உத்தியோகத்தரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத் தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.