பலப்பிட்டிய, கொஸ்கொட ஹதரமன்ஹந்தியவில் நேற்று (11) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான பல்வேறு விடயங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் அ{ஹங்கல்லவிலிருந்து கொஸ்கொட நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் பிஸ்டல் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொஸ்கொடவைச் சேர்ந்த கலதுர நிமுத்து அபிஷான் அபய டி தப்ரூவ் (ரன் மஹத்தயா) என அடையாளம் காணப்பட்டார்.
காயமடைந்த நபர் தற்போது பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் வெளிநாட்டுல் உள்ள 'ஷான் மல்லி' என்ற நபரின் வழிகாட்டலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், முச்சக்கர வண்டி உரிமையாளரான 'பாலே' என்ற நபரை இலக்கு வைத்தே மேற்படி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது, முச்சக்கரவண்டியில் பாலே என்பவரின் உறவினரான காயமடைந்தவரான நிமுத்து அபிஷான் என்ற நபரே பயணித்துள்ளார்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, அ{ஹங்கல்லவில் பாலே என்பவரை இலக்கு வைத்து, அவர் முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.