நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் மேம்பாட்டு மத்திய நிலையத்தின் பராமரிப்பிலிருந்து சமூகமயமாக்கப்படும் மற்றும் திருமணத்தை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு 1 மில்லியன் ரூபாய் நிதி உதவியை வழங்குவதற்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், மாகாண நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களை இணைத்து ஒரு திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, அடையாளம் காணப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் பின்வரும் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஜனாதிபதியும் மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சரும் சமர்ப்பித்த கூட்டு முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் அவர்கள் நிரந்தர மற்றும் பாதுகாப்பான வீட்டைக் கட்டம் கட்டமாகவும் முறையாகவும் கட்டியெழுப்ப தயாராக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்குள் நிலையான மற்றும் பாதுகாப்பான வீடு இல்லாத 30-06-2015 க்குப் பிறகு 18 வயதை எட்டிய பிறகு நிறுவனப் பராமரிப்பிலிருந்து வெளியேறிய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள், திருமணமானவர்கள் அல்லது திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்ள தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் சரியான குடும்பப் பின்னணி அல்லது வாழ்வாதாரம் இல்லாததால் இன்னும் சிறுவர் மேம்பாட்டு மையங்களில் தங்கியுள்ளவர்களும் இந்த நிதி உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.