நல்லூர் கோவில் விஷ்வ பிரசன்னா குருக்களை பாராட்டிய இந்திய நிதி அமைச்சர்...! 'ஹீரோ" புகழாரம்

நல்லூர் கந்தசுவாமி கோயில் பூசகர்களில் ஒருவரான விஸ்வ பிரசன்னா குருக்களை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழ்ந்து பராட்டியமை பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவரை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

இவருடன் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழுவினரும் பங்கேற்று இருந்தனர்.

இதன்போது இவர் யாழ்ப்பாணம் கலாசார மையத்தை பார்வையிட்டுள்ளதோடு நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று  வழிபாடுகளில் ஈடுபட்டதோடு யாழ் பொது நூலகத்தையும் பார்வையிட்டார்.

 குறிப்பாக நல்லூர் கந்தசுவாமி கோவிலில்; கூடியிருந்தவர்களிடம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் பூசகரின் பெயர் என்ன என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். அதன் பின்னர் பிரசன்னா குருக்கள் உலகளவில் தற்போது ஹீரோ என அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆலய மஹோற்சவத்தின் போது கட்டியம் கூறுவதையும் புகழ்ந்து பராட்டினார். நல்லூர் கந்தசுவாமி கோயில் 25 நாள் மஹோற்சவத்தின் போது நடைபெறும் ஒருமுகத் திருவிழாவில் விஸ்வ பிரசன்னா குருக்களின் கணீர் குரலில் கட்டியம் சொல்லப்படும்.

அது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யாழ்ப்பாணத்தில் “ஸ்டேட் பேங் ஒப் இந்தியா” வின் கிளையையும் (ளுடீஐ) திறந்து வைத்தமை சிறப்பம்சமாகும்.