யாழில் சிக்கவுள்ள திடீர் பணக்காரர்கள் : செவ்வந்திக்கு உதவிய முன்னாள் புலி உறுப்பினர்


 
பாதாள குழு தலைவர், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் குற்றவாளியான இஷாரா செவ்வந்திக்கு உதவி புரிந்தமை தொடர்பான விசாரணையை முன்னெடுக்கும் வகையில், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் 02 விசேட குழுக்கள் வடக்கு மாகாணத்தில் செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த குழுக்கள் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்கவும், தப்பிச் செல்லவும் உதவியமை தொடர்பான விசாரணைகளுக்காக 04 குழுக்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருகின்றன.

அத்துடன், இஷாராவை இந்தியாவுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்பவரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என நம்பப்படும் துப்பாக்கிகளும், ரவைகளும் மீட்கப்பட்டமை தொடர்பில் வவுனியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த 45 வயதான வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், ஆனந்தனிடம் வழங்கிய துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பில் குறித்த வர்த்தகர் எவ்வித தகவல்களையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை  

இந்த நிலையில் இஷாராவிற்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் இதுவரையில் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 07 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய 03 பேரும் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருள் கடத்தல் என்பவற்றில் ஈடுபட்டு, சட்டவிரோதமாகவும் முறைகேடாகவும் சொத்துச் சேர்த்த சந்தேகத்தில் 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

 

நேற்று (27) யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் திலக் தனபால,

 11 பேர் மட்டும் அல்லாமல் மேலும் பலருக்கு எதிராக இவ்வாறு வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

பொதுமக்களிடம் பெறுகின்ற தகவல்களின் அடிப்படையில், சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தவர்கள், போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு எதிராக இவ்வாறு நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், யாழில் (துயககயெ) சட்டவிரோதமான சொத்து குவிப்புடன் தொடர்புள்ளவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிடம் கை துப்பாக்கிகள் இருக்கின்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் சட்டவிரோதமாக சொத்து குவித்தார் எனும் சந்தேகத்தில் நபர் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவரது தொலைபேசிக்கு இன்னொரு நபரிடம் இருந்து வாட்சப் மூலம் கைத் துப்பாக்கி ஒன்றின் புகைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.

இதன்போது, கைத்துப்பாக்கியின் படத்தை தனக்கு அனுப்பியவர் பெயரை சந்தேக நபர் தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்