காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை.. : பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு : முஸ்லிம் நாடுகளும் ஹமாஸிடம் முக்கிய வேண்டுகோள்




 
காஸா நகரில் எஞ்சியுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இதுவே கடைசி வாய்ப்பு என்றும், வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
 

இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஒருசேர குரல்கொடுத்து வரும்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார்.
இப்பரிந்துரையில், போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிப்பட்டிருக்கும் பிணைக்கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல், இஸ்ரேல் படிப்படியாக காஸாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
அதேநேரத்தில், காஸாவில் மறுகட்டமைப்புக்கு உறுதியளிக்கும் இந்தப் பரிந்துரை, பாலஸ்தீன அரசமைப்பிற்கு எந்தப் பாதையையும் அமைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.


இதை பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா, ஜெர்மனி, பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில், சவூதி அரேபியா, ஜோர்தான், ஐக்கிய அரபு இராஜியமம், இந்தோனேசியா, துருக்கி, கட்டார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் வரவேற்றுள்ளன. அதேபோல், இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், காஸா போர் நிறுத்தம் தொடர்பாக 20 அம்ச அமைதித் திட்ட பரிந்துரைகளுக்கு ஹமாஸ் பதிலளிக்க மூன்று முதல் நான்கு நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.
அவ்வாறு பதிலளிக்கவில்லை என்றால் முடிவு மிக மோசமானதாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸா திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அரபு மற்றும் முஸ்லிம் தேசியத் தலைவர்களிடமிருந்து ஹமாஸ{க்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், ஹமாஸ{ம் சில கோரிக்கைகளை வைப்பதற்கு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காஸா நகரில் எஞ்சியுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இதுவே கடைசி வாய்ப்பு என்றும், வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, தெற்கு காஸாவில் வசிப்பவர்கள் வடக்கு நோக்கி நகர்வதற்கான கடைசி பாதையை மூடுவதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
இருப்பினும், வடக்கில் வசிப்பவர்கள் இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து தப்பிக்க கடலோரப் பாதையில் தெற்கு நோக்கி நகர முடியும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.