இந்தோனேசியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து இரண்டு நாட்களுக்குப் பிறகும் குறைந்தது பல மாணவர்கள் கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மதியம் நடந்த இச்சம்பவத்தை அடுத்து, 300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களை மீட்க புதன்கிழமையும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கிய அனைவரும் இளம் வயது மாணவர்கள். கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான அல் கோசினி இஸ்லாமிய உறைவிடப் பள்ளியில் உள்ள பிரார்த்தனை மண்டபத்தில் திங்கட்கிழமை பிற்பகல் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள்.
குறைந்தது மூன்று மாணவர்கள் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர், பலருக்கு தலையில் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன.
இடிபாடுகளில் சிக்கி புதைந்திருக்கலாம் என்று கருதப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 91 என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, இடிபாடுகளுக்கு அடியில் குறைந்தது ஆறு சிறுவர்கள் உயிருடன் இருப்பதாக அந்த நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது, ஆனால் கான்கிரீட் பலகைகள் மற்றும் கட்டிடத்தின் நிலையற்ற, கனமான பகுதிகள் காரணமாக தேடுதல் பணி கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும், கனரக உபகரணங்கள் பயன்படுத்த முடியும், ஆனால் அது மேலும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகள் காரணமாக அவை பயன்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் வைத்திருக்க, மீட்புப் பணியாளர்கள் குறுகிய இடைவெளிகளில் இருந்து ஆக்ஸிஜன், தண்ணீர் மற்றும் உணவை அனுப்பி வருகின்றனர்.
விபத்தில் சிக்கியுள்ள மாணவர்கள் பெரும்பாலும் ஏழாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும், 12 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினர் என்றே கூறப்படுகிறது. கட்டிடத்தின் மற்றொரு பகுதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த பெண் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.