'100 சதவீதம் வரி விதிக்கப்படும்.." மீண்டும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப் : பெரும் சிக்கலில் உலக நாடுகள்


அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அவரது இந்த அதிரடி அறிவிப்பு இந்திய மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பில் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“எதிர்வரும் ஒக்டோபர் முதலாம்; திகதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து நாமத்தை கொண்ட மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும்.

இதேபோன்று சமையலறை பொருட்கள், குளியலறை பொருட்களுக்கு 50 சதவீதமும், நாட்காளிகளுக்கு 30 சதவீதமும் இறக்குமதி வரியும் விதிக்கப்படும்.

 வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம். நமது தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்கிறோம்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.


ட்ரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வணிக துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் அதை ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
‘அமெரிக்காவில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கைகளை எடுக்கின்றேன்’ என அவர் கூறியுள்ளார்.

 அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதையடுத்து, உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று கூறிய அவர், அதற்கான பட்டியலை வெளியிட்டார்.

இதற்கு 90 நாள் காலக்கெடு அறிவித்தார். காலக்கெடு முடிந்ததும், உலக நாடுகள் மீதான வரி விதிப்பு அமுலுக்கு வந்தது.

இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட விவசாய விளைபொருட்கள், பால் பொருட்களுக்கான சந்தையை திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா ஏற்கவில்லை. இதனால், உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்திய பொருட்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் 25வீத வரி விதித்தார். இது ஓகஸ்ட் 7ஆம் திகதி அமுலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25வீத வரி விதித்தார். இது ஓகஸ்ட் 27ஆம் திகதி அமுலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50வீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, இந்திய தொழில் துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்திய நிலையில் தற்போது மருந்து பொருட்களுக்கு 100 வீத வரி விதிக்கப்பட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.