செம்மணி மனித புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வுபணிகள் தற்காலிகமாக நிறைவுக்கு வந்ததுடன் அங்கு அகழப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் சில கட்டளைகளையும் பிறப்பித்தார் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பதினைந்தாம் நாள் அகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.
அகழ்வாய்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா
அகழ்வுப் பணிகள் முடிவடையும் நேரத்தில் சில விடயதானங்கள் செய்ய வேண்டும் என்ற விடயங்கள் நீதிமன்றத்தினால் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முதல் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான குழுவினரால் இரண்டாம் கட்ட அகழ்வுபணியின் போது செய்யப்பட்ட செயற்பாட்டு அறிக்கையை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான கட்டளை ஒன்று வழங்கப்பட்டது.
பாடசாலை பை உள்ளிட்ட சில சான்றுப்பொருட்களுடன் அகழ்ந்தெடுக்கப்பட்ட 25ஆம் இலக்க மனித எலும்பு எச்சங்கள் தொடர்பான மனித எலும்பு ஆய்வு அறிக்கைசட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினால் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீதிவானினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை அகழ்வுப் பணி பிரதேசம் இரண்டில் பொலித்தீன் பையில் கட்டி வைக்கப்பட்ட எலும்பு குவியல்கள் கண்டெடுக்கப்பட்டன .
அந்த கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிறிய மற்றும் பெரிய எலும்பு பகுதிகள் காணப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர் சார்பில் தோன்றிய எங்களால் நீதிவானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு மனித எலும்பு தொடர்பான ஆய்வுகளை செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்யப்பட்டது.
அவ்வாறு கூறியதன் அடிப்படையில் நீதிவான் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையில் சட்ட வைத்திய அதிகாரிகள் குழு ஒன்றை உருவாக்கி அதுதொடர்பாக ஆராய்ந்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டது.
இரண்டாம் கட்டத்தில் 45 நாட்கள் பணிநடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. நீதி அமைச்சால் நிதி தொடர்பான விடயம் அங்கீகரிக்கப்பட்டு அந்த நிதி கோரிக்கை முழுமையாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றகணக்காய்வாளர் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நேற்றுடன் நிறுத்தப்படுகின்ற இரண்டாம் கட்டத்தின் அகழ்வாய்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்டு இருக்கிறது.
அது தொடர்பான விடயம் நிபுணர்களுடன் கலந்துரையாடி 15 ஆம் திகதிக்கு முன்னர் நீ திவானுக்கு அறிவிக்கப்படும். பதினைந்து நாட்களும் காலையில் 7மணி முதல் ஆரம்பித்து இரவு பத்து மணிவரை தொடரும் நிலை காணப்படுகிறது.
பணியாற்றுகின்ற நிபுணர் குழு , நீதிவான்,ஊழியர்கள் என பலரும் பணியாற்றினர்.
உடல் உளரீதியிலும் காலநிலை ரீதியிலும்பல சிரமங்களை எதிர்கொண்டனர். அந்தவகையில் ஓய்வு வேண்டுமென்ற அடிப்படையில் இந்த இடைவெளி தீர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இது அகழ்வுபணியை நிறுத்துவதற்கான நடவடிக்கை அல்ல. 45 நாளுக்குரிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் சிறிய சிறிய இடைவெளிகளோடு 45 நாள் அகழ்வு பணியும் தொடரும்என்றார்.