தேர்தல் இப்போதைக்கு இல்லை...! ரணிலின் அறிவிப்பால் குழப்பத்தில் அரசியல்வாதிகள் - மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை



சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமை தொடர்பில் பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்தபோதே நாட்டில் நடத்தவேண்டிய குறித்த தேர்தல்கள்  பற்றி குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமாகும். எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் நிதியளிப்புச் செயற்பாட்டின் பின்னரே வருகின்றது.

எனவே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தாது.

அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த பகுதி பணம் வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பணம் கிடைத்தவுடன் மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கான திட்டங்கள் ஏற்கனவே வகுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின் கட்டணம், குடிநீர் கட்டணம், வரி குறைப்பு ஆகியவற்றில் சில சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.