யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் உறுதியளித்தார்.
வடமாகாணத்திற்கு அதிகளவில் வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய வகையில் காணப்படும் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவது ஏன் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வியெழுப்பினார் இதற்கு பதிலளித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
பலாலி சர்வதேச விமானநிலையத்திலிருந்து தற்போது நாள்தோறும் சென்னை மற்றும் திருச்சி விமானநிலையங்களுக்கு சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இதில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை 70 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இங்கு பயணிகளுக்கான முழுமையான வசதிகள் செய்து கொடுக்கப்படாவிட்டாலும் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
இந்த விமான நிலையத்தின் வருமானம் தொடர்பில் குறிப்பிட்டால் 2021ல் வருமானம் இல்லை 41 மில்லியன் நஸ்டம் ஏற்பட்டுள்ளது.
2022ல் 5 மில்லியன் வருமானம், ஆனால் செயற்பாட்டு நஸ்டம் 82 மில்லியனும், 2023ஆம் ஆண்டில் 152 மில்லியன் ரூபா இலாபமும் இருந்தது.
2024இல் 286 மில்லியன் ரூபா வருமானமும், செயற்பாட்டு லாபமாக 76 மில்லியன் ரூபாவும் இருந்தது. அத்துடன் 2025 ஜுலை வரையில் 197 மில்லியன் ரூபா வருமானமும் செயற்பாட்டு லாபமாக 67 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது.
இந்த விமான நிலையத்தில் 182 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் பலாலியில் சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிப்பதாக இருந்தால், ஓடுபாதை, நுழைவு பாதை தரிப்பிடம் போன்ற ஏனைய வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என்பதோடு மேலதிக காணிகளையும் சுவீகரிக்க வேண்டும்.
ஆகவே இது தொடர்பான சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து மேலதிக தகவல்களை கூறமுடியும்.
அத்தோடு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தால் பெருமளவு நிதியைப் பயன்படுத்தும் மத்தள விமான நிலையத்தைப் போலல்லாமல், யாழ்ப்பாண விமான நிலையத்தை ஒரு வினைதிறனாக மாற்ற உறுதியாக இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு எதிர்காலத்தில் யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு விமான நிறுவனங்களை ஈர்ப்பதற்காக விமாப் போக்குவரத்து கட்டணத்தை மேலும் குறைப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.