ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தால் இலங்கைக்கு பொருளாதார தடையா.. : வெளியான தகவல்


ஈரான் ஜனாதிபதியின்  இலங்கை விஜயம் பிராந்தியத்தில் மிகவும் முக்கியமானதொரு விஜயம் என  கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பிராந்திய வல்லரசுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் இலங்கையின் பக்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின்  இலங்கை விஜயம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
 
எனினும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஈரான் இலங்கைக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுவதால் அது இலங்கையர்களுக்கு நல்ல விடயமாக பார்க்கப்படுகின்றது.

எனினும் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தனது 3 நாள் பாகிஸ்தானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்த போது அமெரிக்காவின் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின் விடயங்களில் அமெரிக்கா மிகவும் தன்னிச்சையான முடிவுகளையே எடுக்கின்றது.

 
எனினும் ஈரான் ஜனாதிபதி  இலங்கை வருவதற்கு முன்னர் பாகிஸ்தான் சென்று வந்தததால் பாகிஸ்தானுடன் நட்புறவு ஏற்பட்டு அது இஸ்ரேலுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்ற நிலையிலேயே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பதாக கருதப்படுகிறது.


அதனால் இலங்கை பாதிக்கும் என்பதற்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என  கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் டியூடர் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் ஈரான் ஜனாதிபதி, இப்ராஹிம் ரைசி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.


அவர் வருகை தந்த விசேட விமானத்திலேயே நாடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை நாட்டிற்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி, உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதனிடையே, இலங்கை மற்றும் ஈரான் இடையில் 5 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

இதன்போது, இலங்கை தேசிய நூலகம், ஈரான் தேசிய நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் ஆகியவற்றுக்கு இடையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் ஈரானின் கலாசார இஸ்லாமிய வழிகாட்டல் அமைச்சுக்கு இடையே திரைப்படத் துறையின் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

ஊடகம் மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கான ஒப்பந்தங்களும் இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது.


இதனைத்தொடர்ந்து ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகள் இணைந்து கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தினர்.

இலங்கை மற்றும் ஈரான் இடையிலான அரசியல், பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார தொடர்புகளை விரிவுபடுத்துவதில் எந்தவித வரம்புகளும் கட்டுப்பாடுகளும் இல்லையென ஈரான் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்