ஈஸ்டர் தாக்குதல் : 'டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைய போகின்றார்" : வெளியான எச்சரிக்கை


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கையை இலங்கை நிராகரித்தால் அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு சீற்றத்தை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் இதனைத் தெரிவித்துள்ள அவர்,

 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி சஹ்ரான் ஹாசிம் என அமெரிக்க புலனாய்வு பிரிவின் விசாரணை அறிக்கையில் உறுதிபட கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை வேறுவிதமான கதைகளை ஊக்குவிப்பது டொனால்ட் டிரம்பிற்கு சீற்றத்தினை ஏற்படுத்தும்.

இதனால் அவர் மேலும் இலங்கைக்கு எதிராக வரிகளை விதிப்பார். உக்ரேனின் அரசியல் தலைமைத்துவத்திற்கு எதிராக நடந்துகொண்டது போல இலங்கைக்கு எதிராக நடந்துகொள்ளலாம். இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுக்கலாம்.
 
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்ற பிறகு அப்போது அமெரிக்க ஜனாதிபதியாகயிருந்த டொனால்ட் டிரம்ப்,தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.
இதன்போது இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க அமெரிக்க புலனாய்வு பிரிவின் உதவியை வழங்கினார்  

நான் அமெரிக்க தூதுவரை தொடர்புகொண்ட தருணத்தில் ஏற்கனவே அமெரிக்க புலனாய்வு பிரிவின் குழு இலங்கை வந்திருந்தது.

அதன் பின்னர் டொனால்ட் டிரம்ப் என்னுடன் பேசவிரும்புகின்றார் என தெரிவித்தார்கள், அதன் பின்னர் நாம் இருவர் தொலைபேசி மூலம் உரையாடினோம் .

 ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க புலனாய்வு பிரிவின் உதவி உட்பட அனைத்து உதவிகளையும் வழங்கினார்.அதன் பின்னர் அமெரிக்க தூதுவருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்க புலனாய்வு பிரிவின் முகவரும் கலந்துகொண்டார்  

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்த தருணத்தில் அமெரிக்க புலனாய்வு பிரிவின் முகவரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது  

தற்போது டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார், அன்று அமெரிக்க புலனாய்வு பிரிவு முன்னெடுத்த விசாரணை அறிக்கை சஹ்ரான் ஹாசிமே சூத்திரதாரி என தெரிவிக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

 நாங்கள் இதனை மீண்டும் குழப்பினால் என்ன நடக்கும்? ஜனாதிபதி டிரம்பிற்கு கோபத்தை ஏற்படுத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளை நீங்கள் அறிவீர்கள்.

 எங்களால் எதனையும் செய்ய முடியாது. யாருக்கு கோபத்தை எற்படுத்தக்கூடாது என்பது எங்களிற்கு தெரிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.