நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!



ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பசிபிக் கடலில் பெரிய அளவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இது ரஷ்யாவின் திட்டமிட்ட சதி என சிலர் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் பசிபிக் பெருங்கடலை அண்மித்துள்ள கம்சத்கா தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டது.

 இதனால் வடகொரியா, தென் கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் என பசிபிக் கடலில் உளள்ளிட்ட பல நாடுகளும், தீவுகளும் சுனாமி எச்சரிக்கையில் காணப்பட்டன.

பசிபிக் பெருங்கடல் முழுக்க பயணிக்கும் இந்த சுனாமி அலைகள் ஹவாய் தீவுகளை தாக்குவதுடன், அதையும் கடந்து சென்று அமெரிக்காவின் அலாஸ்கா, சியாட்டில் தொடங்கி சான் பிரான்ஸிஸ்கோவின் கலிபொர்னியா, லாஸ் ஏஞ்சலஸ், சாண்டியாகோ வரை பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டது.

இதனடிப்படையில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் சுனாமி தாக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 இந்நிலையில்,  இந்த நிலநடுக்கமும், சுனாமியும் இயற்கையாக ஏற்பட்டதா என சந்தேகம் எழுப்புகின்றனர் சில சதிகோட்பாட்டாளர்கள்.

ஏற்கனவே அமெரிக்கா - ரஷ்யா இடையே முரண்பாடு இருந்து வரும் நிலையில், அண்மைக்காலமாக ட்ரம்ப் பொறுப்பேற்றது முதல் ரஷ்யாவுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் நிலநடுக்கம் ஏற்பட்ட கம்சத்கா பகுதியானது ரஷ்யாவின் நீர்மூழ்கி தளம் அமைந்துள்ள இடம் என்றும், ரஷ்யா நடத்திய ரகசிய ஆழ்கடல் அணுகுண்டு சோதனையின் விளைவாக இந்த நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டுள்ளதாகவும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இவை எல்லாம் வெறும் கற்பனையான கோட்பாடுகள்தானே தவிர ஆதாரமற்றவை என்று பலரும் மறுத்துள்ளனர்.

ரஷ்யாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள அந்த பகுதி நிலத்தகடுகள் நகரும் பகுதிதான் என்றும், ஜப்பானை அண்மித்த அந்த பகுதியில் ஆண்டு ஒன்றுக்கு பலமுறை நிலநடுக்கங்கள் பதிவாவது இயற்கைதான் என்றும், தற்போது சற்று பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் நிலநடுக்கத்தை பல நாடுகளின் நிலநடுக்க ஆய்வு மையங்களும் உணர்ந்துள்ள நிலையில் அது இயற்கையாக ஏற்பட்டது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதேநேரம் ரஷ்யாவின் வில்யுசின்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் இரகசிய அணு நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் எனவும் இதன் காரணமாக பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என உக்ரேன் ஆதரவு ஊடகமான United24 Media  தெரிவித்துள்ளது.

இத்தளம், ரஷ்யாவின் பசிபிக் கடற்படையின் முக்கியமான தளமாக இருக்கிறது. இங்கு அணு ஆயுதங்கள் ஏற்றிய நீர்மூழ்கிக் கப்பல்கள், அவற்றுக்கான கப்பல்துறை மற்றும் ஆயுத களஞ்சியங்கள் உள்ளன.


உதாரணமாக, K-44 Ryazan என்ற நீர்மூழ்கிக் கப்பல் மட்டும் 16 பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஒவ்வொன்றிலும் 3 அணுகுண்டுகள் ஏற்றிக்கொண்டு 6,000 கி.மீ தூரம் வரை தாக்கக்கூடிய திறன் கொண்டது.

அதேபோல், Alexander Nevsky, Vladimir Monomakh, Tomsk, Irkutsk போன்ற பல அணு நீர்மூழ்கிக் கப்பல்களும் இங்கு உள்ளன. இவை ரஷ்யாவின் அணு தடுப்புத் திட்டத்தின் மிகப்பாரிய பகுதி என கருதப்படுகின்றன.

இதுவரை, வில்யுசின்ஸ்க் தளத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாஸ்கோவிலிருந்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், சிறிய சேதமும் கூட பாதுகாப்பு ஆபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.