எந்த உணவைத் தவிர்ப்பது என பாரிய குழப்பம் - ஒட்டுமொத்த பிரித்தானியர்களையும் நடுங்கவைத்துள்ள சம்பவம்

 

பிரித்தானிய மக்கள் பொதுவாக பயன்படுத்தும் உணவு ஒன்றில் மர்மமான இ - கொலி E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த உணவை தவிர்ப்பது என்ற குழப்பத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.


பிரித்தானியாவில் பரவலாக விநியோகிக்கப்படும் உணவுப் பொருளுடன் தொடர்பு படுத்தி அரசாங்கம் தரப்பில் வியாழக்கிழமை அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.

ஆனால் அது எந்த உணவு என இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் மில்லியன் கணக்கான மக்களை குழப்பத்திலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே பிரித்தானியாவின் UKHSA அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுவரை 113 பேர்களுக்கு STEC எனப்படும் E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.


இளையோர் மத்தியிலேயே பாதிப்பு அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 2 வயது முதல் 79 வயதுடையவர்கள் E. coli பாக்டீரியா பாதிப்புடன் மருத்துவமனையை நாடியுள்ளனர்.

அத்துடன் மே 25ம் திகதிக்கு பின்னர் தான் அதிக எண்ணிக்கையிலான E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பிரித்தானியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டுவரும் உணவில் இருந்து தான் பரவியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இதுவரை அது எந்த உணவு என கண்டறியப்படாத நிலையில், நிபுணர்கள் தரப்பு தீவிரமாக இந்த விவகாரத்தில் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாக்டீரியா பரவல் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை பிரித்தானிய மக்களிடையே ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, UKHSA அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவி சுத்தப்படுத்திய பின்னரே பயன்படுத்த வேண்டும் என்றும்,

உணவு பண்டங்களை உரிய முறையில் சமைக்கிறோம் என்பதையும் மக்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், எவரேனும் food poison அறிகுறிகளுடன் வாந்தி அல்லது வயிற்றுப்போக்குடன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், தனிமைப்படுத்திக்கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


மேலும், பாடசாலை அல்லது அலுவலகத்திற்கு 48 மணி நேர விடுப்பு எடுத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த அறிகுறிகளுடன் காணப்படுபவர்கள் கட்டாயம், அடுத்தவர்களுக்கு உனவு சமைக்க முயல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.