சஜித் பிரேமதாச அணியுடன் இணைந்த டலஸ் அழகப்பெரும

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கூட்டணி அமைக்க, சுதந்திர மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இந்த கூட்டணி தொடர்பில் சுதந்திர மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும(Dullas Alahapperuma), சஜித் பிரேமதாசவுடன் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சுதந்திர மக்கள் காங்கிரஸ் கையெழுத்திட்டிருந்தது.

இதில் சுதந்திர மக்கள் காங்கிரஸை பிரிதிநிதித்துவப்படுத்தும் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, கே.பி. குமாரசிறி, உபுல் கலப்பத்தி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.

இந்த நிலையில், தற்போது ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைய சுதந்திர மக்கள் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு கட்சிகளினதும் தலைவர்களுக்கிடையில் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டணி முயற்சியை தொடர்ந்து, பரந்த கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி சுதந்திர மக்கள் காங்கிரஸ் அதிபர் தேர்தலில் களமிறங்குமென சரித்த ஹேரத் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.