கறுப்புப்பட்டியலில் இடப்படவுள்ள சாரதி அனுமதிப்பத்திரம் : இலங்கை சாரதிகளுக்கு எச்சரிக்கை

 
 சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்துள்ளார் .


மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் எதிர்வரும் வேலைத்திட்டம் மற்றும் தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் மூலம், நெடுஞ்சாலைகளில் இடம்பெறுகின்ற வீதி ஒழுங்கு விதிகளை மீறுவதற்கு எதிராக பொலிஸாரினால் தண்டப்பத்திரம் வழங்கப்படும் அனைத்து சாரதிகளுக்கும் அவர்களது தவறுகளுக்கமைய கருப்புப் பட்டியலில் இடுவதற்கான புள்ளிகள் சேர்க்கப்படும் என்றும் அவர் மேலும் அறிவித்தார்.

இதேநேரம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் புகையை வெளியிடும் சுமார் 93 வாகனங்கள் இந்த ஆண்டு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வாகன உமிழ்வு சோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.


பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த வாகனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தசுன் கமகே தெரிவித்தார்.

தீங்கு விளைவிக்கும் புகையை வெளியேற்றும் வகையில் வீதியில் வாகனங்களை ஓடினால், 070 3500 525 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு புகைப்படம் அல்லது வீடியோவை அனுப்பி விவரங்களைத் தெரிவிக்குமாறு மோட்டார் போக்குவரத்துத் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.