இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையை வேறொரு நாடு பயன்படுத்த விடமாட்டோம் என்று வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளார்.
புது டில்லியில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
பாதுகாப்பு விடயங்கள் குறித்து இந்தியா கவலைப்படக் கூடாது. சர்வதேச நீரோட்டத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தை நாங்கள் அறிவோம்.
இந்தியாவின் பாதுகாப்பு விடயத்தில் எந்த மூன்றாம் தரப்பினரும் அல்லது நாடும் இலங்கையை பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம்.
எனவே நேர்மையான கருத்துப் பரிமாற்றத்தின் மூலம், எந்த பிரச்சினையையும் சமாளிக்க முடியும் என்று பாலசூரிய கூறினார்.
"நாங்கள் எந்த நாட்டுடனும் வர்த்தகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை எங்களுக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது.
சீனாவுடனான எங்கள் உறவைப் பற்றி இந்தியா கவலைப்படக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.
சீனாவுடன் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகள், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் எங்களுக்கு நல்ல உறவு உள்ளது என்றும் இலங்கையின் வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்