டயானா கமகேயின் எம்.பி. பதவி பறிபோனது.. : முஜிபுர் ரஹ்மானுக்கு வாய்ப்பு



இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, இரட்டை குடியுரிமை பெற்றுள்ளமை நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்திருந்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று காலை இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.

டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ள காரணத்தினால் பாராளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என அறிவிக்குமாறு கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டு வாரங்களின் பின்னர் மேன்முறையீட்டு மனுவினை சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி நிறைவடைந்த நிலையில் வழக்கு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கின் தீர்ப்பு உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

இதேநேரம் ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டயனா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் தெரிவாகியிருந்தார்.

பின்னர் அவர் ஆளும் கட்சிக்கு ஆதரவாளிப்பதாக அறிவித்து அரசில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

--