அண்மையில் நடந்த கொலைகள், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது கடமைகளில் இருந்து சட்ட ஒழுங்கை பராமரிக்கத் தவறிவிட்டார் என்பதற்கான தெளிவான சான்று என தெரிவித்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அவரை பதவி விலகுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அவர்,
“எந்தவொரு அமைச்சரும் பதவியேற்றவுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறார்.
அத்தகைய நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டவுடன், தனது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் திறம்பட நிர்வகிப்பதற்கும் அவர் பொறுப்பு.
எனவே, தற்போதைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் இந்தக் கடமைகளில் இருந்து தவறிவிட்டார்.அதன்படி, அவர் பதவி விலக வேண்டும்.”
அத்துடன், இலங்கை பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் சமீத்திய கொலையை சுட்டிக்காட்டிய தயாசிறி ஜயசேகர, சமீபத்திய கொலைகளுக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளே பொறுப்பு என்றும் கூறியுள்ளார்.
மேலும், தலைக்கவசம் அணிந்திருக்கும் ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரையும் சோதனைக்கு உட்படுத்துவது குற்றங்களைத் தடுப்பதற்கான ஒரு பயனுள்ள வழியாக இருக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.