கோட்டாபயவின் மன்னிப்பை புறந்தள்ளிய நீதிமன்றம்: இது வரலாற்று சரித்திரம் என்கிறார் சுமந்திரன்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சிறிலங்கா அதிபர் ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்பளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தரணியுமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது வரவேற்கத்தக்க விடயம் எனவும் இப்படியான வேறுசில வழக்குகளும் நிலுவையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஆராய்ந்த பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சார்பாக முன்னிலையாகிய சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, அதிபர் கோட்டபாய ராஜபக்ஸ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அது தவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது.

பாரதலக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவிற்கே இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டது. ஹிருணிகா பிரேமசந்திர சார்பிலே நான் முன்னிலையாகி இருந்து இந்த வழக்கை வாதாடி இருக்கின்றேன்.

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக அதிபர் ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம் வேறு சில வழக்குகளும் நிலுவையிலே இருக்கின்றன.

விஷேடமாக மிருசுவில் படுகொலையாளி சுனில்ரட்நாயக்கவிற்கு கொடுத்த மன்னிப்பையும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்த தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை என மேலும் தெரிவித்தார்.