வவுனியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கூலர் ரக வாகனம்: இருவர் கைது

வவுனியாவில் (Vavuniya) 28 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (10) நள்ளிரவு 1.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து மன்னார் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட கூலர் ரக வாகனம் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, 28 கிலோ 750 கிராம் கேரளா கஞ்சாவை வவுனியா காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன், மன்னார் (Mannar) பேசாலை பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்றைய தினம் (10)வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.