ராஜபக்ச இடையே முரண்பாடு - பல உண்மைகளை வெளிக்கொண்டுவரவுள்ள மைத்திரியின் இரகசிய நூல்


மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன இன்று (20) தெரிவித்தார்.

ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து தாம் வெளியேறியதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்திய போதும் தாம் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு பல நிகழ்வுகள் காரணமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது வரை மக்கள் அறியாத உண்மைகளுடன் புத்தகம் வெளியான பிறகு தனக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

நெருக்கடி, வரவு செலவுத் திட்டம் மற்றும் நாட்டின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழில் வல்லுநர்கள் சங்கம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டு சுற்றாடல் அமைச்சராக இருந்த போது தான் முதல் சம்பவத்தை எதிர்கொண்டதாகவும், அண்மைய நாட்களில் இலங்கையில் இல்லாத குறிப்பிட்ட நபரின் டெண்டரில் கையொப்பமிட மறுத்ததால் தான் முதல் சம்பவத்தை எதிர்கொண்டதாகவும், அதன் பின்னர் தனக்கும், ராஜபக்ச அரசுக்கும் இடையே முரண்பாடு எழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அப்போது பிரதமராக இருந்த டி.மு ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில், நெடுஞ்சாலைகள் அமைப்பதில் இடம்பெற்ற மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியதாகவும் அவர் கூறினார்.

மறுநாள் அமைச்சரவைக்கு அழைத்து வரப்பட்ட தான், அங்கு வழக்கத்தை விட வெறித்தனமான முகத்தைக் கண்டதாகவும் மோசடி மற்றும் ஊழல் பற்றி பேசினால் அதே முகத்துடன் தான் கேள்வி எழுப்பப்பட்டதாகவும் முன்னாள் அதிபர் கூறினார்.

அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து பேசக்கூடாது எனவும், அவ்வாறு பேசினால் பதவிகளை வகிக்க முடியாது எனவும் கட்சியின் செயலாளர் மற்றும் அமைச்சர் ஒருவர் தமக்கு கூறியதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.