நாளை மாநாடு - ரணிலுக்கு காத்திருக்கும் புதிய தலையிடி


அதிபரையும் அரசாங்கத்தையும் எதிர்க்கும் வகையில் நாளை மாநாடொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் நாட்டின் நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கான தலைமைத்துவம் உருவாக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், சர்வதேச நாடுகளிடம் இருந்து கடனை பெற்றுக் கொண்டதும் அதனை சரிவர பயன்படுத்தாமையும் இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைக்கான ஒரு முக்கிய காரணம்.

மீண்டும் கடன் பெற்று சந்தோஷமாக வாழக்கூடிய நிலையில் இன்று இலங்கை இல்லை.

இவ்வாறான சூழ்நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டம் நாட்டின் கடன் சுமையை குறைக்கும் வகையில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தார்கள். எனினும் அது அவ்வாறாறு அமையவில்லை.

ஏற்கனவே அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது. இவ்வாறான நிலையில் இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வெளிநாட்டுக் கடனை 560 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கவும் உள்நாட்டுக் கடனை ஆயிரத்து 844 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கவும் உள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார்.

வருமானத்தை ஈட்டும் அரச நிறுனங்களையும் தற்போது விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வரி அறவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆகையினால், அதிபர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த வரவு - செலவுத் திட்டத்தை உத்தர லங்கா கூட்டணியும் அதன் உறுப்பினர்களும் எதிர்க்கிறோம் ” - என்றார்.