ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது சீன கண்காணிப்புக் கப்பல் 'யுவான் வாங் 5'

சீனாவின் யுவான் வாங் 5 (Yuan Wang 5) கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை கடற்பரப்பு பிராந்தியத்திற்குள் நேற்று (15) பிற்பகல் உள்நுழைந்திருந்த நிலையில் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகைதந்துள்ளது.

பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் சீனக் கப்பல் இன்று (16) முதல் 07 நாட்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதிலளிக்காத இந்தியா - அனுமதி வழங்கிய இலங்கை   

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது சீன கண்காணிப்புக் கப்பல் 

குறித்த கப்பலின் வருகைக்கு இந்தியாவின் பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை வெளிப்படுத்திய நிலையில் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீனாவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

இருந்த போதும், இந்திய எதிர்ப்பு மற்றும் இலங்கை அரசின் கோரிக்கயையும் மீறி குறித்த கப்பலானது இலங்கையில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பிற்கு 12ம் திகதி வருகை தந்தது. 

இதனையடுத்து குறித்த கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கான காரணத்தை விளக்குமாறு இந்திய அதிகாரிகளிடம் இலங்கை அரசு கோரியிருந்தது.

ஆனால், இந்திய அதிகாரிகளிடமிருந்து உறுதியான பதில் கிடைக்காத காரணத்தினால் குறித்த கப்பலின் வருகைக்கான அனுமதியை இலங்கை அரசு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

எரிபொருள் நிரப்புவதற்காக என காரணம் தெரிவித்தாலும் அதி நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட கப்பல் என்பதால் பாதுகாப்பு அச்சம் நிலவி வருகின்றது,

இதனால் இலங்கையில் தரித்து நிற்கும் காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட போகின்றது என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு இந்தியா கோரியிருந்தது.

மேலும், இந்நாட்டு கடலில் எந்த அறிவியல் ஆராய்ச்சியும் செய்யக்கூடாது என இலங்கை அரசு வலியுறுத்தியிருந்தது.

அதன்படி, சீனாவின் யுவான் வாங் 5 கப்பலானது நாட்டின் கடல் எல்லைக்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.