மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியாக ஷி ஜின்பிங் தொடர்வதற்கு சீன நாடாளுமன்றம் ஒப்புதல்!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தொடர்வதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.இதன்மூலம் நவீன சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனரான மா சேதுங்குக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவி வகிக்கும் ஒரே தலைவர் என்கிற பெருமையை ஷி ஜின்பிங் பெற்றுள்ளர்.

முன்னதாக, அரசியலமைப்புச் சட்டத்தில் 2018ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு, சீன ஜனாதிபதி தொடர்ந்து இருமுறைதான் பதவியில் இருக்க முடியும் என்ற வரம்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக ஷி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போதே அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவியில் தொடர்வது உறுதி செய்யப்பட்டாலும், இப்போது நடைபெற்று வரும் சம்பிரதாயமான நாடாளுமன்றக் கூட்டத்தில் அதற்கு நேற்று (வெள்ளிக்கிழமை) ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் காங்கிரஸ் எனப்படும் இந்த நாடாளுமன்றத்தின் 2,952 உறுப்பினர்களும் ஷி ஜின்பிங் ஜனாதிபதியாகத் தொடர்வதற்கு ஒப்புதல் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, சீன அரசியலமைப்புச் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்ட ஷி ஜின்பிங், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்தார்மேலும், துணை ஜனாதிபதியாக ஹான் ஷெங் தேர்வு செய்யப்படுவதற்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இவர், முன்னாள் துணைப் பிரதமராக இருந்தவர்.

சீனாவின் தற்போதைய பிரதமர் லீ கெகியாங்கின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ளது. அவருக்கு பதிலாக ஷி ஜின்பிங்குக்கு நெருக்கமான லீ கியாங் புதிய பிரதமராக நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.