சர்வதேசம் சொல்வதனை செய்யப்போவதில்லை : ராஜபக்ச தரப்பு இறுமாப்பு


சர்வதேசம் சொல்வதனை தாம் செய்யப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனிருத்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நேற்று(10) நடைபெற்ற பெலிஎத்த தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மகிந்த ராஜபக்சவுக்கு எங்கு அச்சுறுத்தல் உள்ளது? நாமல் ராஜபக்சவுக்கு எங்கு அச்சுறுத்தல் உள்ளது? சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சஜித், அநுரகுமார ஆகியோரிடம் இருந்தா அச்சுறுத்தல் காணப்படுகிறது.

இவ்வாறு இல்லையெனில் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்தா அச்சுறுத்தல் காணப்படுகிறது. வேறு கட்சிகளிடம் இருந்தா.. இல்லை.

மகிந்த, நாமல், மொட்டுக்கு சர்வதேச ரீதியில் இருந்தே அச்சுறுத்தல் காணப்படுகிறது. இதனைக் கூறும் போது மீண்டும் பழைய கதையை சொல்வதாக தெரிவிப்பார்கள்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4 காணொளி வெளியிட்டுள்ளது. ராஜபக்சர்கள் கொலை செய்து அதிகாரத்தைப் பிடித்ததாக அந்தக் காணொளியில் கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் சர்வதேசத்துடன் இணைந்து மேலும் பல திரைப்படங்கள் தயாரிக்கப்படலாம். அநாமதேய சுவரொட்டிகள் ஒட்டப்படலாம்.

சர்வதேசம் சொல்வதனை நாம் செய்யப்போவதில்லை. இவர்கள் நாமல், மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் அச்சமடைந்துள்ளனர்” என்றார்.