மாணவனின் காலை உணவில் கஞ்சா பைக்கற்றுகள் : அதிரடியாக சிக்கிய விற்பனையாளர்


கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு சிறுவனொருவன் காலை உணவுக்காகக் கொண்டு வந்த மீன் பனிஸில் இரண்டு சிறிய கஞ்சா பைக்கற்றுகள் இருந்ததுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் பனிஸை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இரண்டு சிறிய பைக்கற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து வகுப்பு ஆசிரியருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து, ஆசிரியர் பிள்ளையின் தாயாரை தொலைபேசியில் அழைத்த நிலையில், தாய் பிள்ளைக்கு பனிஸை கொடுக்க வேண்டாம் என்றும் அது பழுதடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வெதுப்பக உணவுகள் விற்கும் முச்சக்கர வண்டியில் இருந்து அது வாங்கப்பட்டதாகவும் ஓட்டுநர் திரும்பி வந்து பிள்ளைக்கு பனிஸை கொடுக்க வேண்டாம் என்று தெரிவித்ததாகவும் தாய் கூறியுள்ளார்.

பின்னர், இந்த விடயம் பாடசாலையின் அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வெதுப்பக உணவுகள் விற்கும் முச்சக்கர வண்டி சாரதி சூட்சுமமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

வேறு ஒருவருக்கு கொடுக்கக் கொண்டு வந்த கஞ்சா அடங்கிய பனிஸ் தவறுதலாக இந்த தாய்க்கு விற்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக அதிபர் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் கம்பஹா - கடவத்தை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.